FIFA WorldCup2022 : வெற்றி கணக்கை துவங்குமா ரொனால்டோவின் போர்ச்சுகல்.? கானா உடன் இன்று பலப்பரிட்சை..
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை இல் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இன்று இரவு 9:30 மணிக்கு மோதுகின்றன.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் ஸ்டேடியம்-974 இல் இன்று மோதுகின்றன. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து விலகிய இருநாட்களுக்கு பிறகு ரொனால்டோ தனது போர்ச்சுகல் அணியுடன், இந்த உலகக்கோப்பையில் தனது முதல் போட்டியில் கானா அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது.
37 வயதான ரொனால்டோ தனது 5ஆவது உலகக்கோப்பையில் விளையாடுகிறார், இது அவருக்கு கடைசி உலககோப்பையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை உலகக்கோப்பை வெல்லாத போர்ச்சுகல் அணிக்கு, ரொனால்டோ இந்த முறை உலகக்கோப்பை வாங்கி தனது கால்பந்து வாழ்க்கையை கோப்பையுடன் முடித்துக்கொள்வார் என்று நம்பப்படுகிறது.
ஃபிஃபா கால்பந்து தரவரிசையில் 9 ஆவது இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி, 61 ஆவது இடம் பெற்றுள்ள கானாவை விட வலிமை வாய்ந்த அணியாக இருந்தாலும், உலகக்கோப்பை போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
எந்த அணியும் குறைந்தது இல்லை என்பதை, சவுதி அரேபியா 2-1 என்று அர்ஜென்டினாவை தோற்கடித்து நிரூபித்தது. இதேபோல் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் அணி, ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குரூப்-H இல் இடம்பெற்ற மற்ற இரு அணிகளான உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள், எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் மாலை 6:30க்கு விளையாடுகின்றன. போர்ச்சுகல் அணி, இன்று தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பிலும், சவுதி அரேபியா நிகழ்த்திய மாயாஜாலம் போல கானா அணியும் இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.