FIFA WorldCup2022: ரொனால்டோ விளையாடாதது ஆட்டத்தின் யுக்தி- மேலாளர் சாண்டோஸ்
ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பையின் 16 அணிகள் மோதும் சுற்றில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும் இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது. மேலும் ரொனால்டோவுக்கு பதிலாக இறங்கிய 21 வயது இளம் வீரர் கான்கலோ ரமோஸ், 2022 உலகக்கோப்பை தொடரின் முதல் ஹாட்ரிக் கோலை அடித்துள்ளார். மற்ற 3 கோல்கள் முறையே பெபே, ரபேல் கரீரோ மற்றும் ரபேல் லியோ அடித்தனர்.
ரொனால்டோ, அணியில் இடம்பெறாதது குறித்து போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் போட்டிக்கு பிறகு கூறியதாவது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், திரும்ப திரும்ப சொல்லமாட்டேன். ரொனால்டோவை அணியிலிருந்து நீக்கியது ‘ஆட்டத்தின் யுக்தி’. அவரது எதிர்கால பங்கு வரையறுக்கப்பட வேண்டிய ஒன்று அதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை.
எனக்கும் ரொனால்டோவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம், ரொனால்டோ சிறந்த கேப்டனாக இருந்து வருகிறார், வீரர்களின் முடிவு தான், இது எங்களை பாதிக்காது என்று சாண்டோஸ் கூறியுள்ளார்.
2008 உலகக்கோப்பைக்கு பிறகு ரொனால்டோ, போட்டியின் தொடக்கத்தில் அணியில் இடம்பெறாதது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.