FIFA WorldCup2022: 16 ஆண்டுகளுக்கு பிறகு போர்ச்சுகல் காலிறுதிக்கு முன்னேற்றம்! ஹாட்ரிக் கோல் அடித்த இளம்வீரர்.!
ஃபிஃபா உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பிறகு கால் இறுதிக்கு போர்ச்சுகல் அணி, தகுதி பெற்றுள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி, 16 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து தற்பொழுது 16 அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை 12 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய 21 வயது கான்கலோ ரமோஸ் இந்த உலகக் கோப்பையின் முதல் ஹட்ரிக் கோலை அடித்து அசத்தியுள்ளார். அவர் ஆட்டத்தின் 17வது, 51வது மற்றும் 67 வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் 33 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் பெபே ஒரு கோல் எடுத்து 2-0 என்று முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் அணியின் ரபேல் கரீரோ 55வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை அடித்தார். 58வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணி வீரர் அகாஞ்சி ஒரு கோல் அடிக்க ஸ்விட்சர்லாந்து அணிக்கு முதல் கோல் கிடைத்தது.
மேலும் ஆட்டத்தின் முடிவில் 90 நிமிடங்களுக்கு பிறகு வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் ஆறாவது கோலை போர்ச்சுகல் அணி,அடிக்க 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி 16 வருடங்களுக்கு பிறகு ஃபிஃபா உலக கோப்பையின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.