FIFA WorldCup2022: ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த, மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு 39ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் ஜூலியன் அல்வெரஸ் மேலும் ஒரு கோல் அடித்தார்.
மேலும் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா அணியால் எந்த ஒரு கோலும் அடிக்க முடியவில்லை இதனால் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய இரண்டாவது பாதியில் 69 வது நிமிடத்தில் ஜூனியன் அல்வெரஸ் அர்ஜென்டினா அணிக்காக மூன்றாவது கோலை அடித்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அர்ஜென்டினாவின் கையே ஓங்கி இருந்ததால் குரோஷியா அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை, இதனால் குரோஷியா அணியை 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.