FIFA WorldCup2022: பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில் கலவரத்திற்கு வாய்ப்பு! பிரான்ஸில் 10,000 போலீஸ் குவிப்பு.!
உலகக் கோப்பையில் பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில், கலவரங்களுக்கு முன்னேற்பாடாக 10,000 போலீசார் குவிப்பு.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை முன்னிட்டு கலவரங்கள் ஏற்படக்கூடும் என்று அஞ்சி, பிரான்ஸில் முன்னேற்பாடாக 10,000 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
காலிறுதியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை வீழ்த்தி மொரோக்கோ அரையிறுதிக்கு முன்னேறியதை அந்நாட்டு ரசிகர்கள் பிரான்ஸில் வன்முறை கலவரத்துடன் கொண்டாடினர், இதனையடுத்து இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரான்ஸின் சாம்ப்ஸ் எலிஸீஸின் பாதுகாப்பிற்காக மட்டுமே கிட்டத்தட்ட பாதி போலிசார் அர்ப்பணிக்கப்பட உள்ளனர், இதனால் பாரிஸ் சுற்றுவட்டச் சாலையின் பெரும்பாலான நுழைவு வாயில்கள் மாலை 6:30 மணி முதல் மூடப்பட உள்ளன. மேலும் மாலையில், பல மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளன.
மேலும் மற்றொரு அச்சுறுத்தலாக இரு நாடுகளுக்கு இடையே உள்நாட்டு மோதலை தூண்டிவிட சில தீவிரவாத குழுக்கள் சமூக ஊடகங்களில் அணி திரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் போட்டிக்கு பிறகு நகர மையத்தின் தெருக்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க ரோந்து பணியை மேற்கொள்ள உள்ளனர்.