FIFA உலகக்கோப்பை: பாகிஸ்தானை நட்பு ரீதியாக விளையாட அழைத்த சோமாலியா..!
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஜின்னா விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் கம்போடியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தான் ஆடவர் கால்பந்து அணி உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி வரலாறு சாதனை படைத்துள்ளது.
நவம்பர் மாதத்தில் தொடங்கும் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் அணிகளை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி நவம்பர் 16-ஆம் தேதி அன்று சவுதி அரேபியா உடனும், நவம்பர் 21-ஆம் தேதி தஜிகிஸ்தான் உடனும் மோதவுள்ள நிலையில் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் சில மாற்றங்களைச் செய்து ஃபிஃபா (FIFA )உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான 24 பேர் கொண்ட அணி இன்று அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 16 ஆம் தேதி அன்று சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஃபதே மைதானத்தில் பாகிஸ்தான், சவுதி அரேபியாவை எதிர்கொள்கிறது. சவூதி மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகளில் இதுவரை சந்தித்ததில்லை. இந்த மோதலானது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் மோதலாகக் கருதப்படுகிறது. சவுதி அரேபியாவை எதிர்கொண்ட பிறகு, பாகிஸ்தான் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி வரும் அங்கு 21 நவம்பர் அன்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா மைதானத்தில் தஜிகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.
நவம்பர் 16 ஆம் தேதி சவூதி அரேபியா அணியை பாகிஸ்தான் சந்திக்கும் முன் தங்களுடன் நட்பு ரீதியாக ஆட்டத்தை விளையாட வேண்டும் என சோமாலியா அணி தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு (பிஎஃப்எஃப்) சோமாலியா கோரிக்கையை ஏற்கும் என்பது சாத்தியமில்லை. சவுதி அரேபியாவிற்கு எதிரான ஒரு மிக பெரிய போட்டிக்கு நடைபெற உள்ள சில தினங்களுக்கு முன்பு நட்புரீதியாக விளையாடுவது சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது.
FIFA உலகக்கோப்பை தகுதிச் சுற்றுகளின் 2-வது சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானின் அணி நாளை இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவிற்குச் செல்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 197-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் அணியை கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 15 மாதங்களுக்கு ஃபிஃபாவால் தடை செய்யப்பட்டது.