FIDEWorldCup2023: உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார்..? கார்ல்சன் E4, பிரக்ஞானந்தா E5 காய் நகர்த்தலுடன் தொடங்கியது..!
உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
முதல் சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, கார்ல்சனின் நகர்வுகளை உண்ணிப்பாக கவனித்து, தனது காய்களை நகர்த்தினார். கார்ல்சனும் விரைவாக தனது காய்களை நகர்த்தினார். அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இருவரும் பொறுமையாக இருந்தனர். மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 28 நிமிடங்கள் செலவிட்டார்.
பிறகு பிரக்ஞானந்தாவும் தனது நகர்வுகளை தாமதப்படுத்தினார். இறுதியில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளைப் பெற்றனர். இதனால் முதல் சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரண்டாவது சுற்றுத் தொடங்கியுள்ளது.
இந்த இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் பங்கேற்றுள்ளார். கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களுடன் தனது நகர்வைத் தொடங்கியுள்ளார். கார்ல்சன் E4 காயை நகர்த்த, பிரக்ஞானந்தா E5 காய் நகர்த்தலுடன் இரண்டாம் சுற்று போட்டியானது தொடங்கியுள்ளது.