Chess World Cup Final:அனல் பறந்த உலகக்கோப்பை செஸ் இறுதிபோட்டி முதல் சுற்று ட்ரா !
உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் பேபியோனா கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அதன்படி, முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கி, மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடினார். இரண்டு வீரர்களும் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களைப் பெறுவார்கள்.
அதன்பின் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 நிமிடங்கள், நகர்வு 1ல் தொடங்கி ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் அதிகரிக்கும். இதில் பிரக்னாநந்தாவின் முதல் நகர்வை இந்தியத் தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் மேற்கொண்டார். பிரக்னாநந்தா தனது முதல் நகர்வாக c4 க்கு செல்ல, கார்ல்சன் e5 க்கு சென்றார். பிரக்னாநந்தா 12வது நகர்வாக d3 க்கு செல்ல, கார்ல்சன் h6 க்கு தனது நகர்வை மேற்கொண்டார்.
அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இருவரும் பொறுமையாக இருந்தனர். மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 28 நிமிடங்கள் செலவிட்டார். பிறகு பிரக்ஞானந்தா தனது நகர்வுகளில் நேரத்தை எடுத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவின் நகர்வுகளுக்கு விரைவான முறையில் காய் நகர்த்தினார்.
இந்நிலையில், தற்பொழுது முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இதில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர். இதனால் முதல் சுற்று சமனில் முடிவடைந்துள்ளது. மீண்டும் இன்று இரண்டாம் சுற்று நடைபெறுகிறது இதில் பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் போட்டியில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.