FIDE செஸ் உலகக்கோப்பை போட்டி;கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர்..!
FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் காப்ரியலை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார்.
ரஷ்யாவின் சோச்சி நகரில் FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியானது ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.மேலும்,ஆகஸ்ட் 3 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதன்படி,நேற்று நடைபெற்ற FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் காப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த 15 வயது இளம் வீரர் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார்.
பிரக்னானந்தா சென்னையை சேர்ந்தவர்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உலக இளம் வீரர்களுக்கான சதுரங்க போட்டியின் 8 வயது பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.அதன்பின்னர்,2016 ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் ஹங்கேரி நாட்டின் பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்காரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிக இளைய இன்டர்நேஷனல் செஸ் மாஸ்டரானார்.
இதனைத் தொடர்ந்து,2018 ஆம் ஆண்டு தனது 12 வயதில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற இளையோர்க்கான சதுரங்கப் போட்டியில், கிராண்ட் மாஸ்டர் மோரோனி லூக்காவை வென்று ‘இளம் வயதினருக்கான கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று,நேற்று FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய ஆதிபன் வெறும் 22 நகர்வுகளில் நியூரிஸ் டெல்கடோ ராமிரெஸை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.