WWT20 : வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி படைத்த ரெகார்ட்! அரை இறுதி வாய்ப்பும் பிரகாசம்!
நேற்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 9-வது போட்டியில் இங்கிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஷார்ஜா : மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்க அணியும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தி இருந்தது.
மேலும், நடைபெற்று வரும் இந்த தொடரில், தொடர்ந்து 2-வது வெற்றியையும் இங்கிலாந்து மகளிர் அணி பதிவு செய்துள்ளது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியை வென்றதுடன் இங்கிலாந்து அணி மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்துள்ளது. அது என்னவென்றால், நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் பிடித்து 124 ரன்கள் எடுத்து 125 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்திருப்பார்கள்.
இந்த இலக்கை 19.2 ஓவரில் இங்கிலாந்து அணி சேஸ் செய்து வெற்றி பெற்றிருப்பார்கள். இந்த சேசிங்கின் மூலம் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 120 க்கு மேல் உள்ள டார்கெட்டை சேஸ் செய்த முதல் மகளிர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
இதற்கு முன், ஷார்ஜாவில் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 111 என்ற இலக்கை சேஸ் செய்தது தான் அதிகமாக இருந்தது.
இந்த சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி நேற்று முறியடித்துள்ளது. மேலும், தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக 125 என்ற இலக்கை சேஸ் செய்து, இதற்கு முன் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணி செய்த சாதனையை சமன் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா 2009-ம் ஆண்டும் மற்றும் நியூஸிலாந்து 2023-ம் ஆண்டும் தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக இதே 125 என்ற இலக்கை சேஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே இலக்கை நேற்று இங்கிலாந்து மகளிர் அணி சமன் செய்துள்ளது. மேலும், குரூப்-B பிரிவில் 2 தொடர் வெற்றிகளைப் பெற்று முதலிடம் இருப்பதால் அரை இறுதி வாய்ப்பும் இங்கிலாந்து அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.