“கனவு நனவானது;நாட்டுக்கு அர்ப்பணிப்பு” – ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானு …!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் கனவு நனவானது என்று வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில், இன்று பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் (87 கிலோ + 115 கிலோ) மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வரலாறு படைத்துள்ளார்.இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா வெள்ளியுடன் தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தலைவர்கள் வாழ்த்து:
பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சாணுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்,பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கனவு நனவானது:
இந்நிலையில்,பதக்கம் வென்றது குறித்து மீராபாய் கூறியதாவது: “நிஜமாகவே எனது கனவு நனவானது.இந்த பதக்கத்தை எனது நாட்டுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,இந்த பயணத்தின் போது என்னுடன் இருந்த அனைத்து இந்தியர்களின் லட்சக்கணக்கான பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.எனது குடும்பத்திற்கு குறிப்பாக எனக்காக நிறைய தியாகங்கள் செய்த மற்றும் என்னை நம்பிய என் அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
இந்த பயணத்தில் தொடர்ச்சியான ஆதரவுக்கு என்னை ஆதரித்த அரசு, விளையாட்டு அமைச்சகம், எஸ்.ஏ.ஐ, ஐ.ஓ.ஏ, இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு, ரயில்வே, ஓ.ஜி.கியூ, ஸ்பான்சர்கள் மற்றும் என்னை விளம்பரப்படுத்தும் நிறுவனம் ஐ.ஓ.எஸ். எனது கடின பயிற்சியாளர் விஜய் சர்மா ஐயா மற்றும் ஆதரவு அளிக்கும் ஊழியர்களின் தொடர்ச்சியான கடின உழைப்பு, உந்துதல் மற்றும் பயிற்சிக்கு சிறப்பு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முழு பளுதூக்குதல் சகோதரத்துவத்திற்கும் எனது நாட்டு மக்களுக்கும் மீண்டும் நன்றி. ஜெய் ஹிந்த்”,என்று தெரிவித்துள்ளார்.
I am really happy on winning silver medal in #Tokyo2020 for my country ???????? pic.twitter.com/gPtdhpA28z
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 24, 2021
மேலும்,இப்போட்டியில்,சீனாவின் ஹூ ஜிஹுய் 210 கிலோ (94 கிலோ + 116 கிலோ) எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.இந்தோனேசியாவின் ஐசா விண்டி கான்டிகா 194 கிலோ (84 கிலோ + 110 கிலோ) எடையை தூக்கி வெண்கலத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.