உங்கள் பிரச்சாரத்திற்காக என்னைப் பயன்படுத்தாதீர்கள் – ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா வேதனை!
பாகிஸ்தான் வீரருக்கு தனது ஆதரவை தெரிவித்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு.
ஜப்பானில் நடந்து முடிந்த 2020-ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி ஏறிதல் பிரிவில் இந்தியாவின் 23 வயதான ராணுவ வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இறுதிச் சுற்றில் நீரஜ் 87.58 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தாா். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, போட்டியின் முதல் சுற்றில் தனது ஈட்டியை தேடியதாகவும், பின்னர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதனை வைத்தியிருந்ததாகவும், பின்னர் அவரிடம் சென்று ஈட்டி தன்னுடையது என்று கூறி, பெற்றுக்கொண்டு போட்டியை தொடர்ந்ததாக கூறினார்.
இதனைவைத்து, போட்டியின்போது மற்றவர்களது ஈட்டியை, எப்படி வைத்திருக்க முடியும் என்று பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராகச் சில பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டன. இந்திய வீரரின் கவனத்தைத் திசை திருப்பவே இதுபோன்று செயல்களில் ஈடுபட்டதாக சிலர் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரருக்கு தனது ஆதரவை தெரிவித்து நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உங்களது பிரச்சாரத்துக்காக என்னையும், எனது கருத்துகளை பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். விளையாட்டு எங்களுக்கு ஒற்றுமையை கற்று கொடுத்திருக்கிறது.
என்னுடைய பேட்டியை தவறாக புரிந்துகொண்ட சிலர் இணையத்தில் பதிவிடுவது வேதனை தருவதாக உள்ளது. நீங்கள் ஒரு கருத்தை தெரிவிக்கும் போது அந்த விளையாட்டின் நெறிமுறையை தெரிந்து வைத்திருப்பது அவசியம். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் அவரவருக்குரிய ஈட்டியை வைத்திருப்பார்கள். யாரும் அந்த ஈட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் போட்டியின் விதிமுறை.
எனவே, என்னுடைய ஈட்டியைக் கொண்டு நதீம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார். ஈட்டி எறிதல் போட்டியில் வீரர்கள் தங்கள் சொந்த ஈட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டி நடத்தும் நிர்வாகமும் ஈட்டிகளை வழங்கும். போட்டி நடக்கும் 2 மணி நேரத்துக்கு முன்பு போட்டி நிர்வாகத்திடம் ஈட்டியை ஒப்படைக்க வேண்டும்.
அதன்பிறகு அந்தப் போட்டி முடியும் வரை அது நிர்வாகத்தின் உடைமையாகிவிடும். அதனால் அந்த ஈட்டியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றும் போட்டி முடிந்த பிறகு அந்த ஈட்டிக்குச் சொந்தமான வீரர், தனது ஈட்டியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் வீடியோ வாயிலாகவும் தெரிவித்துள்ளார்.
I would request everyone to please not use me and my comments as a medium to further your vested interests and propaganda.
Sports teaches us to be together and united. I’m extremely disappointed to see some of the reactions from the public on my recent comments.— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 26, 2021