டைமண்ட் லீக் தொடர் : ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதித்தார் நீரஜ் சோப்ரா!
சுவிட்சர்லாந்து : நேற்று நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள லாசன் மாகாணத்தில் 2024 ஆண்டுக்கான டைமண்ட் லீக் தடகளத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவருக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு விளையாடினார். மேலும், இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற அவர் 89.49 மீ தூரம் எரிந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் தட்டி சென்றார்.
இதற்கு முன் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகப் பங்கேற்ற இவர் 89.45 மீ ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதற்கு முன்னதாக நடைபெற்றிருந்த இந்த டைமண்ட் லீக் 2022-ம் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதே போல அடுத்த ஆண்டு 2023-ம் ஆண்டில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தற்போது இந்த ஆண்டில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்த டைமண்ட் லீக் தொடரில் அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் (2022,2023&2024) பங்கேற்று, தொடர்ச்சியாகப் பதக்கத்தை முத்தமிட்டு சாதனை படைத்துள்ளார். தற்போது நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் அவர் தொடக்கத்தில் பின்தங்கியே இருந்தார். ஆனால், அதன் பிறகு 85.58 மீ. வரை ஈட்டி எறிந்து முதல் மூன்று இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
இறுதிச் சுற்றில் பல நெருக்கடிகளுடன் விளையாடிய நீரஜ் சிறப்பாக விளையாடி 89.49 வரை ஈட்டியை எறிந்து 2-ஆம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். டைமண்ட் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் நீரஜ் சோப்ரா மற்றும் ஜெர்மனி வீரரான ஜூலியன் வெபர் தலா 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும், செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ்ச் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரெனடாவின் வீரரான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 21 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர்.