தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் என்பதனை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியை மட்டும் அறிவித்து இருந்தது. அணியில் 22 வயதான உத்தரபிரதேச கிரிக்கெட் வீரர், துருவ் ஜூரல் பெயரும் இடம்பெற்று இருந்தது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!
துருவ் ஜூரல் முதல் முறையாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த இவருக்கு தற்போது இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் துருவ் ஜூரல் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” மற்றவர்களை போல இந்திய அணியில் இடம்பெறுவது ஒரு கனவு அந்த கனவு எனக்கு நிறைவேறியுள்ளது. இந்த தருணத்தை நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வார்த்தையால் சொல்லவே முடியாது. நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்தே எனக்கு கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. விடுமுறை நாட்களில் ஆக்ராவில் உள்ள ஏக்லவ்யா ஸ்டேடியத்தில் கிரிக்கெட் முகாமில் சேரலாம் என்று நினைத்தேன். அதற்கான படிவத்தை நிரப்பினேன், ஆனால் இந்த விஷயத்தை என்னுடைய அப்பாவிடம் நான் சொல்லவில்லை.
பிறகு என்னுடைய அப்பாவிற்கு இந்த விவரம் தெரிந்ததும் அவர் என்னைத் திட்டினார். பின் நான் கிரிக்கெட் கிட் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார், நான் அவரிடம் ஆறிலிருந்து ஏழாயிரம் என்று சொன்னேன், அவர் என்னை விளையாடுவதை நிறுத்தச் சொன்னார், ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன்.
ஒற்று அறைக்குள் இருந்துகொண்டு வெளியே வராமல் சரியாக சாப்பிடாமல் இருந்தேன். பிறகு நான் பிடிவாத காரன் என்பதால் என்னுடைய பி அம்மா தங்கச் சங்கிலியை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுத்தார்” எனவும் தெரிவித்துள்ளார்.