பிரதமரின் கடிதத்துக்கு நன்றி தெரிவித்த தோனி.!
மோடியின் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து, தோனி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோனியின் ஓய்வு குறித்து, பல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று 19 ஆம் தேதி பிரதமர் மோடி, தோனிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், வெற்றியோ, தோல்வியோ எல்லா நேரத்திலும் அமைதியை கடைபிடித்து சிறந்து விளங்கியவர் தோனி என்றும் சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். உங்களின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். உங்களது ஸ்டைலில் சிக்ஸர் விளாசி 2011 உலகக்கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்தியர்கள் எப்போதும் நினைவில் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட போட்டியில் வெற்றியைக் கொண்டாடியபோதும், உங்கள் அழகான மகளோடு நீங்கள் விளையாடும் படத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுடன் மனைவி மற்றும் மகள் அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மோடியின் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து, தோனி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், ஒரு கலைஞர், சிப்பாய் மற்றும் விளையாட்டு வீரர் அவர்கள் விரும்புவது பாராட்டு என்றும் அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் அனைவராலும் கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதாகும். உங்கள் பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.