ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!

நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று  செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் இண்டி ஆகியோருடன் நேரத்தை செலவிட விரும்புவதாக “கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதுதான் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட்  போட்டி, ஆஸ்திரேலியாவை இரண்டு முறை உலக சாம்பியனாக்குவதில் டேவிட் வார்னர் தனது பங்கை ஆற்றியுள்ளார். 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 2023 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

உலக கோப்பையில் வார்னர் சிறப்பாக செயல்பட்டார்.  உலக கோப்பையில் டேவிட் வார்னர் 11 போட்டிகளில் 48.63 சராசரியில் 535 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக எம்.சின்னசாமி மைதானத்தில் 163 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி:

2025ல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து அவர் கருத்து தெரிவித்தார். வார்னர் கூறுகையில்,”சாம்பியன்ஸ் டிராபி வரப்போகிறது என்பது எனக்குத் தெரியும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நான் நன்றாக கண்ணியமான கிரிக்கெட்டை விளையாடினால், அவர்களுக்குத் தேவைப்பட்டால், நான் இருப்பேன் என்று அவர் கூறினார். டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் விளையாடுவார். இந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் வார்னர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி:

டேவிட் வார்னரின் கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டி 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாகும். அந்த போட்டியில் அவர் 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஒரு நாள் சர்வதேச வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் 161 போட்டிகளில் மொத்தம் 6932 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 179 ரன்கள். இந்த காலகட்டத்தில், அவர் 22 சதங்கள் மற்றும் 33 அரை சதங்கள் அடித்துள்ளார். அதில் 733 பவுண்டரிகள் மற்றும் 130 சிக்ஸர்களை அடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில்  வார்னர் அறிமுகமானர்.

ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் வாக், மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோருக்குப் பிறகு ஆஸ்திரேலியா வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்