சென்னையில் சி.எஸ்.கே 4வது ஐபிஎல் கோப்பை வெற்றி விழா கொண்டாட்டம் தொடங்கியது…!
சென்னையில் சி.எஸ்.கே 4வது ஐபிஎல் கோப்பை வெற்றி விழா கொண்டாட்டம் தொடங்கியது.
2021- ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள், உலக கோப்பை கிரிக்கெட் முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார். அந்த விழா சென்னையில் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்தியா திரும்பியுள்ளார். இதனையடுத்து, இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில்,சி.எஸ்.கே கேப்டன் தோனி, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.