கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே செய்த சம்பவம்! ஒரே போட்டியில் 2 உலக சாதனை!
டி20 உலகக்கோப்பைத் தொடரின் தகுதி சுற்றுப் போட்டியில், காம்பியா அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 2 உலக சாதனையை படைத்துள்ளது.
நைரோபி : வரும் 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்காக ஆப்பிரிக்கா துணை கண்டத்திற்கான தகுதி சுற்றானது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில், இன்று ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது.
ஜிம்பாப்வே அணி செய்த 2 புதிய சாதனை :
- நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 344 ரன்கள் குவித்தனர். இது, சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணி முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களாக பார்க்கப்படுகிறது.
- அதனைத் தொடர்ந்து, பந்து வீசிய ஜிம்பாப்வே அணி காம்பியா அணியை வெறும் 54 ரன்களுக்கு சுருட்டியது. இதன் காரணமாக 290 என்ற பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இது சர்வதேச டி20 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
போட்டியின் விவரகம் :
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணி உச்சகட்ட அதிரடியில் விளையாடியது. இதன் காரணமாக 20 ஓவர்களில் 344 என்ற இமாலய ரன்கள் குவித்தது. அதிலும், அணியின் கேப்டனான ராசா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, கிளைவ் மாடண்டே 17 பந்துக்கு 53 ரன்களும், மருமணி 19 பந்துக்கு 62 ரன்களும், பிரையன் பென்னட் 26 பந்துக்கு 50 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பின், அந்த இமாலய ஸ்கோரை சேஸ் செய்ய பேட்டிங் களமிறங்கிய காம்பியா அணி, ஜிம்பாப்வே அணியின் அசுரத்தனமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் காரணமாக, ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 புதிய சாதனையை கிரிக்கெட் அரங்கில் செய்துள்ளனர்.