சூடு பறக்க போகும் ஐபிஎல்! லக்னோ அணியின் மெண்டராக ‘ஜாகீர் கான்’ நியமனம்!
சென்னை : 2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக ஜாஹிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெறப் போகும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஐபிஎல் அணிகள் தீவிரமாக இருந்து வருகிறது. அதன் விளைவாக தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை லக்னோ அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய ஜாஹீர் கான், சுமார் 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற போது அதற்கு முக்கிய காரணமாக இவர் அமைந்தார்.
தனது வேகத்தால் அந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், அந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆலோசகர் போன்ற பல பணிகளைச் செய்து வந்தார். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
அந்த 5 முறையும் மும்பை அணிக்காக இவரது பங்கு ஏதேனும் ஒரு வகையில் இருந்திருக்கும். மேலும், மும்பை அணியில் பும்ரா போன்ற வேகபந்து வீச்சாளரை நன்கு வடிவமைத்தார். அதே போல லக்னோ அணியில் வளர்ந்து வரும் வேகப் பந்து வீச்சாளரான மாயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர் இவருக்குக் கீழ் விளையாடினார் என்றால் இந்திய அணிக்கு வரும் காலத்தில் ஒரு சிறப்பான பவுலர் கிடைப்பார் என்பதில் சந்தேகமேயில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Zaheer, Lucknow ke dil mein aap bohot pehle se ho 🇮🇳💙 pic.twitter.com/S5S3YHUSX0
— Lucknow Super Giants (@LucknowIPL) August 28, 2024