‘நீங்க வரலான …நாங்களும் வரமாட்டோம்’ …பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி காட்டம்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரமுடியாது என சொல்வதில் துளியும் நியாயமில்லை என மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடர் நடைபெறவுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் இந்த தொடரானது 8 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.
இதனால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி முன்னதாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி இந்திய அதாவது பிசிசிஐ தாங்கள் பாகிஸ்தான் சென்று இந்த தொடரில் கலந்துக் கொள்ளமாட்டோம் என தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ஹைபிரிட் முறையில் இந்திய அணிக்கான போட்டியை மட்டும் துபாயில் நடத்தலாம் என ஐசிசி தெரிவித்தது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்க்கு பல கோடி ரூபாய் நஷ்டமாகிவிடும். இதனால், அதற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் மறுப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பாக நாளை ஐசிசி தலைமையிலான கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், இந்த சர்ச்சைக் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்வி பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த சர்ச்சை தொடர்பாக காட்டமாக பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் ஐசிசியின் தலைவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களின் முடிவில் மாறாமல் உறுதியாகவே இருக்கிறோம். பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாடும்.
ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது என்பதை துளியும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எந்த முடிவானாலும் அனைவரையும் சமமாகவே மதித்து எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் முன்னதாக தெளிவாக கூறியிருக்கிறோம். இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், வருங்காலங்களில் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை”, என மோஷின் நக்வி காட்டமாக பேசி இருந்தார்.