“ரோஹித் சர்மா யார் என்று அந்த ஒரு தொடர் முடிவு செய்துவிட முடியாது”..ஆதரவாக பேசிய யுவராஜ் சிங்!
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த தொடரில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் பார்மும் மிகவும் மோசமானதாக இருந்தது என்றே சொல்லலாம்.
டெஸ்ட் போட்டியில் அவருடைய சமீபத்திய பார்ம் சற்று மோசமாக இருந்தாலும் கூட அவருக்கு ஆதரவாகவும் சில வீரர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ஒரு போட்டியை வைத்து ரோஹித் ஷர்மாவை தீர்மானித்து விட முடியாது என பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய யுவராஜ் சிங் ” ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்வது என்பது தவறான ஒரு விஷயம் ஏனென்றால், கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி போட்டியில் அவர் விளையாடாமல் மற்றொரு வீரருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். கடந்த காலத்தில் எத்தனை கேப்டன்கள் இதைச் செய்திருக்கிறார்கள்? என்று உண்மையாகவே எனக்கு தெரியவில்லை.
அப்படி ஏதேனும் வீரர்கள் போட்டியை விட்டு கொடுத்திருந்தார் என்றால் என்னிடம் சொல்லுங்கள்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங் ” ஒரு போட்டியை வைத்து ரோஹித் சர்மாவை நாம் விமர்சனம் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை அழைத்து சென்றுள்ளார்.
அது மட்டுமின்றி அவருடைய தலைமையில் தான் மும்பை இந்தியன் அணி 5 முறை ஐபிஎல் போட்டிகளில் கோப்பையையும் வென்றுள்ளது. எனவே நடந்து முடிந்த அந்த தொடர் மற்றும் அவர் யார் என்று முடிவு செய்துவிட முடியாது” எனவும் ரோஹித் குறித்து யுவராஜ் சிங் பேசியுள்ளார்.