WTC பைனல்: ஜொலிக்க போகும் இந்திய நட்சத்திரம் இவர் தான்… க்ரேக் சேப்பல் கணிப்பு.!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி நிச்சயம் ஜொலிப்பார் என கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்னும் இரண்டு நாளில் தொடங்க இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஜூன் 7 இல் லண்டன் ஓவல் மைதானத்தில் உலகமே எதிர்பார்க்கும் ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி நடைபெறுகிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக 2019-21 காலகட்டத்தில் அணிகளின் டெஸ்ட் வெற்றி மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் இடையே நடத்தப்பட்டது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியதில் முதல் டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இரண்டாவது முறையாக இந்திய அணியும், முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த இறுதிப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ஸ்டீவ் ஸ்மித், கவாஜா, வார்னர் போன்ற வீரர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக இருக்கின்றனர்.
முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான கிரேக் சேப்பல், விராட் கோலி தான் இந்த இறுதிப்போட்டியில் ஸ்டார் பிளேயராக திகழப்போகிறார் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடியவர். ரன்கள் குவிப்பதில் ஆர்வமாக இருக்கும் விராட் கோலி, ஓவல் மைதானத்தில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கான நட்சத்திர வீரராக இருப்பார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 போட்டிகளில் விளையாடி 1979 ரன்கள் (சராசரி- 48.26) குவித்துள்ள விராட்டின் சாதனைகளே அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதைக் கூறுகின்றன. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடியுள்ள விராட்டிற்கு, பவுன்ஸ் ஆகும் இந்த ஓவல் மைதானமும் சாதகமாக அமையும் என்று கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
ஓவல் மைதானத்தில் வானிலை சரியாக அமைந்து ஆடுகளமும் உலர்ந்த (Dry) படி இருந்துவிட்டால், மைதானம் ஆஸ்திரேலிய ஆடுகளம் போல் இருக்கும், இதனால் விராட் கோலி இந்தியாவிற்கு அதிக ரன்கள் குவிப்பார். விராட் கோலி இந்த பைனலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி போட்டியிலும் 186 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்து முடித்த ஐபிஎல் தொடரிலும் உச்சகட்ட பார்மில் இருந்த விராட் 14 போட்டிகளில் 639 ரன்கள் குவித்திருந்தார்.
இந்த இறுதிப்போட்டியிலும் விராட் இதே பார்மில் தொடர்ந்தால் இந்திய அணியின் ஐசிசி கோப்பை இம்முறை நிச்சயம் நழுவிப்போகாது என்று கிரேக் சேப்பல், கோலியைப் புகழ்ந்துள்ளார்.