#WT20WC2023: நியூசிலாந்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மகளிர் அணி அபார வெற்றி.!
ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஐசிசி டி-20 மகளிர் உலகக்கோப்பையில், நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ட்ரையான்சிறப்பாக விளையாடி 40 ரன்கள் குவித்தார். நாடின் டி கிளார்க் (28* ரன்கள்) மற்றும் கேப்டன் சுனே லூஸ் (22 ரன்கள்) எடுக்க மற்ற வீராங்கனைகள் யாரும் நிலைத்து நிற்கவில்லை, ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 132 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் தாஹுஹு மற்றும் ஈடன் கார்சன் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
133 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே தடுமாறி வந்தது, தொடக்க ஆட்டக்காரர்கள் டக் அவுட்டாக , அதன் பின் வந்தவர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நோன்குலுலேகோ மலபா 3 விக்கெட்களும், மரிசான் கேப் மற்றும் க்ளோயி ட்ரையான் இருவரும் தலா 2 விக்கெட்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகியாக க்ளோயி ட்ரையான் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 2இல் விளையாடி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடமும், நியூசிலாந்து அணி 2இல் விளையாடி இன்னும் ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத நிலையில் கடைசி இடமும் வகிக்கின்றன.