WorldCup2023 : பேட்டிங் மைதானம் டெல்லி.! ஆப்கானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா புதிய திட்டம்.?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் களமிறங்க உள்ளன. இந்த போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடைசியாக, 5 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதுத் தெம்புடன் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு 156 ரன்கள் எனும் பெரும் வித்தியாசத்துடன் படுதோல்லி அடைந்து இந்த முறை வெற்றி பெற வேண்டிய வேகத்துடன் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் … சாதனை படைப்பாரா கோலி ..?
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரும் ஏமாற்றத்தை அளித்தனர். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கிசான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தனர்.
இதனை அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் தங்களது அனுபவம் வாய்ந்த சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இன்றைய டெல்லி அருண் ஜெட்லி மைதானமானது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு அணிகளும் சேர்ந்து 754 ரன்கள் சேர்த்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இன்றைய ஆட்டம் பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மைதானமானது வேகப்பந்து வீச்சிக்கு ஏற்ற வகையில் அமையும் என்பதால் , நமது இந்திய அணியில் உள்ள சுழற்பந்து பந்துவீச்சாளர்களான ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரில் யாரேனும் ஒருவரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனேகமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இன்றைய போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சமி அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த முறை ரன் ஏதும் அடிக்காமல் ஏமாற்றத்தை அளித்த கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிசான், ஸ்ரேயா அய்யர் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அருண் ஜெட்லி மைதானத்தின் பெவிலியனுக்கு விராட் கோலியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், விராட் கோலியும் இன்றைய ஆட்டத்தில் கூடுதல் சிறப்பாக ஆடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ரசீத் கான், முகமது நபி, ஃபசல்ஹாக் ஃபரூக்கி உள்ளிட்டோரின் பந்துவீச்சை மட்டுமே பலமாக கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி இன்று தனது பேட்டிங்கிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.