WorldCup2023: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பதிவு செய்த பாகிஸ்தான்..!

#PAKvNED

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹா இருவரும் களமிங்கினர்.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே அதாவது  4-வது ஓவரில் லோகன் வான் வீசிய பந்தை அவரிடமே அடித்து கேட்ச் கொடுத்து  ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை 12 ரன்னில் இழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் வந்த வேகத்தில் 5 ரன்  எடுத்து பெவிலியன் திரும்பினார். களத்தில் நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் இமாம்-உல்-ஹா  15 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க  இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் களமிறங்கிய முகமது ரிஸ்வான் , சவுத் ஷகீல் இருவரும் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டுவந்தனர்.

நிதானமாக விளையாடிய வந்த முகமது ரிஸ்வான் , சவுத் ஷகீல் இருவரும் அரைசதம் விளாசி 120 ரன்கள் குவித்தனர். இவர்கள் கூட்டணியை ஆர்யன் தத் பிரித்தார். ஆர்யன் தத் வீசிய 29-வது ஓவரில்  சவுத் ஷகீல்  விக்கெட்டை இழந்தார். முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல் இருவரும் தலா  68 ரன் சேர்த்தனர். பிறகு மத்தியில் களம் கண்ட முகமது நவாஸ் 39, ஷதாப் கான் 32 எடுத்து அணியின் எண்ணிக்கையை  உயர்த்தினர். இறுதியாக பாகிஸ்தான் 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்தனர்.

நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டையும் , கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்டையும் பறித்தனர். 287 ரன்கள் என்ற இலக்குடன் நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் , மேக்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வந்த வேகத்தில் மேக்ஸ் 5 ரன் எடுத்து வெளியேற அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 3 பவுண்டரி விளாசி 17 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய  பாஸ் டி லீடே , விக்ரம்ஜித் சிங் உடன் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர்.

நிதானமாக விளையாடிய விக்ரம்ஜித் சிங் அரைசதம் விளாசி 52 ரன்னில் ஃபகார் ஜமானிடம் கேட்ச் கொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த பாஸ் டி லீடே 6 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தம் 67 ரன் விளாசினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேற இறுதியாக நெதர்லாந்து அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் ஹரிஸ் ரவூப் 3 விக்கெட்டையு, ஹசன் அலி தலா 2 விக்கெட்டையும்,  ஷஹீன் ஃபரிடி, முகமது நவாஸ், ஷதாப் கான் , அகமது தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் 3-வது போட்டி பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் இடையே தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் காலை 10:30 மணிக்கும் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கா vs இலங்கை இடையே  4-வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்