World Cup 2023: 9 நகரங்களில் போட்டிகள்.. அகமதாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான்! வெளியான தகவல்!
இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தனது லீக் ஆட்டங்களை ஐந்து மைதானங்களில் விளையாட திட்டம்.
2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடரை இந்தியா முதல்முறையாக தனியாக நடத்த உள்ளது. சுமார் பத்து அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை தொடருக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. ஏனென்றால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இதுவரை குழப்பங்கள் நீடித்து வருகிறது.
பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு இந்தியா வராது என்றும் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளது எனவும் மாறி மாறி கூறி வருகின்றனர். இதன்பின்னர், ஐசிசி நடத்திய ஆலோசனையில், தாங்கள் விளையாடும் போட்டியை தென்னிந்தியாவில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளை, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடமாட்டோம் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி அங்கு விளையாட முடியாது என தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், ODI உலகக் கோப்பை 2023 வரைவு அட்டவணையின்படி, இந்தியா தனது லீக் ஆட்டங்களை 9 நகரங்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, டெல்லி, அகமதாபாத், புனே, தர்மசாலா, லக்னோ, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடப்பாண்டு உலகக்கோப்பை லீக் போட்டிகளை வரைவு அட்டவணையின்படி இந்தியா நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணையின்படி, அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது.
மேலும், வரைவு அட்டவணையின்படி, பாகிஸ்தான் தனது ODI உலகக் கோப்பை 2023 தொடரில் லீக் கட்டத்தில் ஐந்து மைதானங்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி அவர்கள் தங்கள் போட்டிகளை அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் விளையாடுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று, 2019-ஆம் ஆண்டு பரபரப்பான டைட் பைனலில் போட்டியிட்ட அணிகளான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியின் தொடக்க ஆட்டத்தை அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். அதே நேரத்தில் இந்தியா மூன்று நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் தனது முதல் போட்டியை தொடங்க உள்ளது. BCCI -ஆல் தயாரிக்கப்பட்ட 2023 ODI உலகக் கோப்பையின் ஆரம்ப வரைவு அட்டவணையில் உள்ள சில மார்க்யூ போட்டிகள் இவை தான் குறிப்பிடப்படுகிறது.
பிசிசிஐ வரைவு அட்டவணையை ஐசிசியுடன் பகிர்ந்து கொண்டது, பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் இறுதி அட்டவணை வெளியிடும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த வரைவு அட்டவணையில் நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிக்கான இடங்கள் குறிப்பிடப்படவில்லை. இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்றுள்ளனர்.