மகளிர் ஆசிய கோப்பை : சொல்லி அடிக்கும் இந்திய அணி..! இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை ..!
மகளிர் ஆசிய கோப்பை : இந்த மாதம் ஜூலை-19 தேதி அன்று தொடங்கப்பட்ட மகளீர் ஆசிய கோப்பை தொடரானாது விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது அரை இறுதி போட்டியை எட்டியுள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய மகளீர் அணியும், வங்கதேச மகளீர் அணியும் மோதியது.
இன்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக தடுமாறியது.
இதன் விளைவாக 44 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து மோசமான நிலையில் தத்தளித்தது. இந்த நேரத்தில், வங்கதேச மகளீர் அணியின் கேப்டனான நிகர் சுல்தானா ஒரு பக்கம் அந்த அணிக்கு தூணாக நின்று விளையாடினார். அவரது 51பந்துக்கு 332 ரன்கள் எனும் பொறுமையான விளையாட்டால் வங்கதேச அணி சற்று ரன்களை எடுக்க தொடங்கியது.
இறுதியில் 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராதா யாதவ் மற்றும் ரேணுகா சிங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். அதன்பின், எளிய இலக்கான 81 ரன்களை எடுக்க இந்திய மகளீர் அணி பேட்டிங் களமிறங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இணைந்து இந்த தொடரில் வழக்கம் போல அதிரடியாகவே விளையாட தொடங்கினார்கள். மேலும், வங்கதேச மகளீர் அணி கடுமையாக முயற்சி செய்தும் 1 விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக இந்திய மகளீர் அணி 11 ஓவர்கள் முடிவடைகையில் 83 ரன்கள் எடுத்து அசத்தியது, இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய மகளீர் அணியில் ஸ்மிருதி மந்தனா 39 பந்துக்கு 55 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
மேலும், இந்த முதல் அரை இறுதி போட்டி வெற்றியின் மூலம் இந்திய மகளீர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று இரவு பாகிஸ்தான் – இலங்கை மகளீர் அணிகளிடையே நடைபெறும் இரண்டாம் அரை இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் நாளை மறுநாள் இறுதி போட்டியில் இந்திய மகளீர் அணி விளையாடவுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.