கடைசி போட்டியில் வெற்றி! அரை இறுதியை உறுதி செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி!
இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் வெற்றிப் பெற்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது.
தொடக்கத்தில் விளையாடிய வீராங்கனைகள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவர்களைத் தொடர்ந்து வந்த வீராங்கனையும் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து மகளிர் அணி தடுமாறி விளையாடியது. அதன் பின், நாட் ஸ்கிவர்-பிரண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை தனி ஆளாக நின்று உயர்த்தினார்.
அவருடன் இணைந்து அணியின் கேப்டனான ஹீதர் நைட்டும் சிறிது நேரம் விளையாடினார். இருவரின் விளையாட்டால் இங்கிலாந்து அணி டீசன்டான ஸ்கோரை ஸ்கோர் போர்டில் செட் செய்தது. இறுதியில், 20 ஓர்கள் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழந்து 141 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 57 ரன்களும், ஹீதர் நைட் 21 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அஃபி பிளெட்சர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அதன்பின், 142 அடித்தால் வெற்றியென வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது.
தொடக்கத்தில் களமிறங்கி பேட்டிங் விளையாடிய இரண்டு வீராங்கனைகளும் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள். இருவரின் விக்கெட்டை எடுப்பதற்கு இங்கிலாந்து அணி கடுமையாக பந்து வீசியது. ஆனாலும், இருவரின் நங்கூர விளையாட்டு இங்கிலாந்து அணிக்கு சவாலாகவே அமைந்தது.
இருவரும் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அதில், ஹேலி மேத்யூஸ் 50 ரன்களும், கியானா ஜோசப் 58 ரன்களும் எடுத்திருந்தனர். இதிலே வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பாதி வெற்றி உறுதியானது. அதன்பின் இருவரும் தங்களது விக்கெட்டை இழந்தவுடன் அடுத்ததாக டீன்ட்ரா டாட்டின் 27 ரன்கள் விளாசினார்.
இதன் காரணமாக 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அரை இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து மகளிர் அணி ரன்ரேட் அடிப்படையில் இந்த தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. மேலும் குரூப் B பிரிவில் தென்னாப்பிரிக்க அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.