அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இந்திய மகளிர் அணி? இலங்கை அணியுடன் இன்று பலப்பரீட்சை!
டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 12-வது போட்டியாக இன்று இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகிறது.
துபாய் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணி தங்களது லீக் சுற்றின் 3-வது போட்டியில் இலங்கை மகளிர் அணியுடன் விளையாடவுள்ளனர்.
இந்த போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7,30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடந்த மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருக்கும். இதனால், இந்த போட்டியை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும், இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட வீடு திரும்ப வேண்டியது தான். அதனால், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறது.
அதே நேரம், இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுருக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இன்று நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவார் என தகவல் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அக்-13ம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய அணி தங்களது கடைசி லீக் சுற்றின் கடைசி போட்டியில் மோதவுள்ளது. இதனால், அரை இறுதி பாதையே இந்திய அணிக்கு கடுமையானதாக அமைந்துள்ளது.
கடந்த போட்டி முடிவடைந்த போது இந்திய மகளிர் அணி துணை கேப்டனான ஸ்மிர்தி மந்தனா, ‘வெற்றி பெறுவது மட்டுமே எங்களது தற்போதைய நோக்கம் எனவும் ரன்ரேட்டை பற்றி பிறகு பார்த்து கொள்ளலாம்’ எனவும் கூறி இருந்தார். இதனால், இதை நோக்கி இந்திய மகளிர் அணி செல்லும என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.