INDvENG : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3-வது போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், தற்போது டி20 போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்து இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது போட்டி (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட டி20 தொடரை கைப்பற்றிவிடும். எனவே, ஹாட்டிற்க் வெற்றியை பதிவு செய்து தொடரை வெல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் விளையாட வாய்ப்புகள் உள்ளது என்பதற்கான விவரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
அதன்படி, மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கலாம்.முதல் டி20 போட்டியில் அபிஷேக் 79 ரன்கள் விளாசினார். அவரை போல எப்போது வேண்டுமானாலும் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்புகள் உள்ளது. மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை தனி ஒருவனாக வெற்றி பெறச் செய்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் இறங்கலாம். கடந்த சில நாட்களாக சூர்யாவால் பெயருக்கு ஏற்றவாறு நடிக்க முடியவில்லை. எனவே, பழைய பார்முக்கு வருவதற்கு அவர் மூன்றாவது போட்டியை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் வாய்ப்பு பெறலாம். இரண்டாவது டி20 போட்டியில் துருவ் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறினார். எனவே, அவரை நீக்கவும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சுக்கு அர்ஷ்தீப் சிங் பொறுப்பேற்கிறார். வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல் ஆகியோரும் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
விளையாட வாய்ப்புள்ள வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி.
இரண்டாவது போட்டியில் விளையாடிய வீரர்கள் தான் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், 3-வது போட்டி முக்கியமான போட்டி என்பதால் அணியில் மாற்றம் செய்ய நிர்வாகம் விரும்பவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.