டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ரோஹித் சர்மா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழலில், அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிசிசிஐ உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்கள் ரோஹித்திடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் ஓய்வு முடிவை மாற்றுவதற்கு பேச முயற்சி செய்துள்ளது.
ஆனால், ரோஹித் சர்மா இந்த நேரத்தில் தான் ஓய்வை அறிவித்தல் அது சரியாக இருக்கும் எனவும் தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் செய்யமாட்டேன் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியுடனான கடும் தோல்விக்குப் பிறகு, “கலங்கிவிட்டதாக”வும் வேதனையுடன் பேசியிருந்தார். எனவே, அதுவும் அவருடைய ஓய்வு முடிவுக்கு காரணம் எனவும், ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு வருகிறது.
மேலும், ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம், ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த அளவுக்கு இந்த டெஸ்ட் தொடரில் மோசமான பார்மில் ரோஹித் சர்மா இருக்கிறார்.
எனவே, சிறப்பான ஒரு ஆட்டத்தை விளையாடி இந்திய அணிக்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுத்து ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் இப்படியான தகவல் பரவி வருவது உண்மையா அல்லது வதந்தியான தகவலா? என்பது வரும் ஜனவரி 3 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டி முடிந்த பிறகு தான் தெரிய வரும்.