இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?
கடந்த போட்டியில் சென்னை அணி தோற்கடித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தோடு இன்றய போட்டியில் மும்பை களமிறங்குகிறது.

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே வந்துவிடும். ஏனென்றால், உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு சென்னை – மும்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூறுவார்கள்.
அந்த அளவுக்கு பரபரப்புக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது என்று சொல்லலாம். இந்த சீசனில் ஏற்கனவே, இந்த இரண்டு அணிகளும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த டார்க்கெட்டையும் சென்னை அணி கடைசி வரை சென்று தடுமாறி தான் அடித்து வெற்றிபெற்றது.
அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இன்று மும்பை அணி தங்களுடைய சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறது. அதே சமயம் மீண்டும் மும்பையை வீழ்த்தி புள்ளி விவரப்பட்டியலில் முன்னேறி செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை அணியும் பயிற்சி செய்து வருகிறது.
இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் தான் இருந்து வருகிறது. உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 7-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றிபெற்று 10-வது இடத்தில் உள்ளது. எனவே, இன்று நடைபெறும் போட்டி இரண்டு அணிக்கும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 38 போட்டிகளில் மோதியுள்ள நிலையில், 18 முறை சென்னை அணியும், 20 முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.