சச்சின், ஹிட்மேன் சாதனை பட்டியலில் இடம்பெறுவாரா கிங் கோலி.?
விறுவிறுப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்தும், சமன் செய்தும் வருகிறார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்தார். அதேபோல இந்த சாதனையை நாளை நடைபெறவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஒரே ஒருநாள் போட்டியில் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைக்கவுள்ளார். கடந்த 12ம் தேதி நடந்த போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த 51 ரன்கள் மூலம் நடப்புத் தொடரில் அவர் 594 ரன்களை எட்டினார்.
இதில் ஆட்டமிழந்ததன் மூலம் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது. இருந்தும் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பட்டியலில் 591 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த குயின்டன் டி காக்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். மொத்தமாக 594 ரன்கள் எடுத்துள்ள கோலி, 2 சதம் மற்றும் 5 அரைசதங்களை அடித்துள்ளார்.
இந்த சாதனையை படைக்க இன்னும் 7 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே, நாளை (15ம் தேதி) நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்த சாதனையைப் படைப்பார். மேலும், 2019-ம் ஆண்டு ரோஹித் சர்மாவும், 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் 600 ரன்களை கடந்தனர். இப்போது விராட் கோலியும் 600 ரன்களை தாண்டினால் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.