மீண்டும் மீண்டுமா? ரஞ்சி டிராபி போட்டியிலும் சொதப்பிய ரோஹித் சர்மா!
மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபி போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே, 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்களும் கொட்டப்பட்டது. விமர்சனங்கள் அனைத்திற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ரஞ்சி டிராபி போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடவேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது.
எனவே, கடைசியாக 2105-ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் ரோஹித் விளையாடி இருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கவுள்ளதால் நிச்சயமாக இந்த போட்டியிலே அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில் 19 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் மோசமான பார்மை தொடர்ந்துள்ளார்.
போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சற்று தடுமாறி விளையாடி வந்த அவர் ஜம்மு காஷ்மீர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் நசீர் மிரின் லெங்த் பந்து வீச்சால் அவுட்டானார். அவுட் சைட் பக்கம் பந்தை அடிக்க அவர் முயன்றபோது ஷாட் தவறி எட்ஜ் ஆகி யுத்விர் சிங் கைக்கு கேட்சாக சென்றது. இதனையடுத்து, ரோஹித் சர்மா மீது மீண்டும் அவருடைய பேட்டிங் பற்றிய விமர்சனங்களும் எழுந்துள்ளது.