“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!
முன்பை விட தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன், விளையாடவும் தயாராக இருக்கிறேன் என ஷரதுல் தாகூர் தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரின் முதல் போட்டியானது வரும் நவ-22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த தொடருக்காகத் தேர்வான இந்திய அணியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது என்னவென்றால் அந்த அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி இடம்பெறாதது தான். அந்த வகையில் இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாகூரும் ஒருவர் தான்.
சமீபத்தில் காயத்திலிருந்து குணமடைந்த அவர், தான் ஆஸ்திரேலிய தொடருக்கு இடம்பெறாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்துப் பேசியிருந்தார்.
இது குறித்து அவர் பேசிய போது, “ஆஸ்திரேலியா தொடர் குறித்து யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நல்லபடியாக வீடு திரும்பி விட்டேன்.
ஆனாலும், எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நான் மீண்டும் சிறந்த முறையில் தயாராகி உள்ளேன். கடந்த சில மாதங்களாக நான் பந்து வீச்சிலும் சிறப்பாக முன்னேறி வருகிறேன்.
என்னுடைய உடற் தகுதி முன்பைவிட சிறப்பாக தற்போது இருக்கிறது. ஆஸ்திரேலியா தொடர் என்பது மிகவும் பெரிய தொடராகும். எனவே, அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம் என நம்புகிறேன், அதே போல இங்கிலாந்து அணி, இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடர் இருக்கிறது என இப்படி அடுத்தடுத்த பெரிய தொடர்கள் இருப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்”, என ஷர்துல் தாகூர் பேசி இருந்தார்.