2வது டெஸ்ட் போட்டி… டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு.! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா அணி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்சய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 6ம் தேதி) இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இருப்பினும், இப்போது ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளது.
மறுபுறம், தனஞ்சய் டி சில்வா தலைமையிலான இலங்கை அணி இந்த போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இரு அணிகளுக்கும் இடையிலான இந்த 2-வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்சய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கியுள்னர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த தொடக்க பேட்ஸ்மேனுமான திமுத் கருணாரத்னுக்கு இந்த டெஸ்ட் போட்டி, அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். தனது 100வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். போட்டியின் முடிவில் இது குறித்த அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அணியில் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி , பியூ வெப்ஸ்டர், கூப்பர் கானொலி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னெமன், நாதன் லியோன் ஆகியோர் உள்ளனர்.
இலங்கை
கேப்டன் தனஞ்சய டி சில்வா தலைமையிலான அணியில் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், லஹிரு குமார ஆகியோர் உள்ளனர்.