நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!
இதுவரை மொத்தமாக 61 ஐபிஎல் போட்டிகள் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 67 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால், அணியில் இடம்பெற்றிருக்கும் நடராஜன் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருப்பது தான். அணியில் மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.
அப்படி இருந்தாலும் கூட ஒரு சில போட்டிகளில் அவருக்கும் வாய்ப்பு கொடுத்து பார்த்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அவர் இடம் பெறாதது விமர்சனமாகவும் எழுந்துள்ளது. அவருக்கு ஏன் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை என பலரும் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், டெல்லி அணியின் வழிகாட்டியும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான கெவின் பீட்டர்சன் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எங்களால் ஒரு போட்டியில் அணியில் 12 வீரர்களை மட்டுமே விளையாட வைக்க முடியும். இந்த சூழலில், எப்படி அவரை அணியில் எடுக்கமுடியும். நடராஜன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் தான். அதே சமயம், அவர் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கும்போது எந்த இடத்தில் பொருத்தமாக இருப்பார் என்று தெரியவில்லை. அப்படி பொருத்தமான இடத்தை நீங்கள் சொல்லுங்கள் அதன்படி நாங்கள் செய்கிறோம்.
இப்போது நாங்கள் சரியான திட்டமிட்டு இந்த ஓவர்களை இந்த பந்துவீச்சாளர்கள் வீசவேண்டும் என்கிற அளவுக்கு முடிவு செய்து வைத்துள்ளோம். எனவே, இந்த நேரத்தில் மாற்றங்கள் செய்தால் சரியாக இருக்காது. மற்றபடி விளையாட வாய்ப்புகள் கிடைக்காமல் வெளியே இருக்கும் வீரர்கள் சிறப்பான வீரர்கள் இல்லை என்று ஆகிவிடாது. அவர்களுக்கே தெரியும் அவர்கள் சிறப்பான பந்துவீச்சாளர்கள் அவர்களுடைய வாய்ப்பு நெருங்கி வந்துகொண்டு இருக்கிறது என்று. எனவே, இந்த ஒரு விஷயத்தை வைத்து விமர்சனம் செய்யவேண்டாம்” எனவும் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.