ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!
ரோஹித் சர்மா விமர்சனங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதன்பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு அறிவிப்பார் என தகவல்கள் வெளியான சூழலில், தனக்கு இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணமில்லை என திட்டவட்டமாக அறிவித்து விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும் அவர் ஓய்வு பெறுவது நல்லது என விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கிறது. இந்த சூழலில் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள் என ரோஹித் ஷர்மாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மற்ற கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நான் சொல்வேன்.
அவருடைய கேப்டன்சியில் இந்திய அணி 70 %க்கு மேல் வெற்றியை பெற்றிருக்கிறது. இவ்வளவு சதவீதம் என்பது கடந்த காலங்களில் இருந்த கேப்டன்களை விட அதிகமாக தான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஒரு நாள் போட்டிகளில் சிறந்த கேப்டன்களில் அவரும் ஒருவர். ஏற்கனவே அவர் ஓய்வு குறித்து பரவும் வதந்தி தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்?
ஒரு வீரராக மட்டுமின்றி ஒரு கேப்டனாகவும் சிறந்தவராக ரோஹித் சர்மா இருக்கிறார். இறுதிப் போட்டியில் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தது, இந்தியாவுக்கு அருமையான தொடக்கத்தைக் கொடுத்தது அவருடைய அந்த இன்னிங்ஸ் தான் வெறிக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. அப்படியான அழுத்தமான போட்டியில் கேப்டன்சி பிரச்சினை அதையும் தாண்டி இப்படி ஒரு இன்னிங்ஸ் விளையாடுவது சாதாரண விஷயம் இல்லை.
எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு எந்த காரணமும் இல்லை. விமர்சனங்கள் வந்துகொண்டு தான் இருக்கும். அதனை அவர் கண்டுகொள்ளாமல் எவ்வளவு தூரம் விளையாடமுடியுமோ அவ்வளவு தூரம் விளையாடவேண்டும். அவரை நினைத்து இந்தியாவின் ரசிகர்கள் நிச்சயமாக பெருமைப்படவேண்டும் ஒரு நாள், டெஸ்ட், டி20 என அணைத்து வடிவங்களிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவரை போல ஒருவர் இன்னும் விளையாடினாள் தான் சரியாக இருக்கும் ” எனவும் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.