ருதுராஜ் ஏன் டீம்ல இல்ல ..? இந்திய அணியை விமர்சிக்கும் ஆகாஷ் சோப்ரா ..!
ஆகாஷ் சோப்ரா : இலங்கை அணிக்கு தேர்வாகி இருக்கும் இந்திய அணியை, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது யூட்யூப் பக்கத்தில் விமர்சித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் (ஜூலை-27) இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை நேற்றைய நாளில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனால் பலதரப்பு ரசிகர்கள் பல சர்ச்சைகளை முன்வைத்தனர். அதில் குறிப்பாக பெரும்பாலான ரசிகர்கள் முன்வைத்து கருத்து என்னவென்றால் ருதுராஜ் அணியில் ஏன் இடம்பெறவில்லை என்பது தான்.
அதிலும் ரியான் பராக், சிவம் துபே போன்ற அனுபவம் அந்த அளவுக்கு இல்லாத வீரர்கள் எல்லாம் அணியில் இடம் பெற்றிருக்கும் போது ருதுராஜ் கெய்க்வாட் ஏன் இடம்பெறவில்லை என்பது அனைவரும் முன்வைக்கும் கேள்வியாகும். ரசிகர்களை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரானா ஆகாஷ் சோப்ரா அவரது யூட்யூப் பக்கத்தில் இந்திய அணியை குறித்து பேசி இருக்கிறார்.
அவர் கூறுகையில், “இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக பணியமர்த்தப்பட்டது ஒரு பெரிய கதையாக இருந்து வருகிறது. அதே போல் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் அடுத்து அவருடைய பெயர் துணைக் கேப்டனாக இல்லை.. ஏன்?.
மேலும் டி20 மற்றும் 50 ஓவர் அணிகளிலும் ரியான் பராக் பெயர் இடம் பெற்று இருக்கிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் அவருக்கு சிறப்பாக விளையாடாத போதும் அவரது பெயர் உள்ளது. அதே வேலை ருத்ராஜ் மற்றும் அபிஷேக் சர்மா பெயர்கள் இல்லை. நான் டி20 கிரிக்கெட்டை பற்றி பேசுகிறேன். இதில் ரியான் பராக் இருக்க அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இல்லாதது ஏதோ தவறான ஒன்றை நமக்கு சொல்கிறது.
ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் டி20 அணிக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே டி20 உலக கோப்பையிலும் இருந்தார்கள். அதே போல வாஷிங்டன் சுந்தர் ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு வந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல ரவி பிஸ்னாய் சாகல் இடத்திற்கு இருக்கிறார் என்றும் தெரிகிறது.
மேலும் டி20 கிரிக்கெட்டில் குலதீப் யாதவும் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் கவுதம் கம்பீர் பெரும்பாலும் ஆல்ரவுண்டர் வீரர்களை விரும்புகிறார் என்று தெரிகிறது”, என்று பேசி இருந்தார். இவர் கூறிய கருத்துக்களை சுட்டி காட்டி அதனை வீடியோவாக இணையத்தில் பதிவிட்டு பெரும்பாலான ரசிகர்கள் ஆதரவு அளித்தும் வருகின்றனர்.