ஏன் முடியாது? கண்டிப்பாக 300 அடிப்போம்…ஹைதராபாத் பயிற்சியாளர் அதிரடி பேச்சு!
இந்த சீசனில் முதல் 300 ரன்கள் எதிர்பார்க்கலாம் என SRH பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் நம்பிக்கை தெரிவித்து பேசியுள்ளார்.

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற அணிகளை திகைக்க வைத்தது. அந்த போட்டியில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை தொடுவதற்கு வெறும் 14 ரன்கள் தான் இருந்தது. ஆனால், அந்த ரன்களை தொடமுடியவில்லை. இருப்பினும் இந்த சீசன் ஹைதராபாத் அணி அதற்கு தான் முயற்சி செய்யும் என தெரிகிறது.
ஏனென்றால், கடந்த சீசனிலும் இது போன்று அதிரடியாக விளையாடியபோது பெங்களூருக்கு எதிராக 287 ரன்கள் எடுத்திருந்தது. அந்த சீசனில் மட்டுமின்றி இதுவரை ஐபிஎல் வரலாற்றிலும் அதிக ரன்கள் அடித்த ஸ்கோர் அது தான். அந்த சீஸனின் போதே அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட் 300 ரன்கள் அடிப்பது தான் எங்களுடைய கனவு என பேசியிருந்தார். எனவே, அவர் பேசியதை போலவே அணி அதிரடியாக விளையாடி வருவதால் 300 ரன்கள் எடுத்துவிடுவமோ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த சூழலில் இன்று லக்னோ அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தால் ஹைதராபாத் எவ்வளவு ரன்கள் அடிக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இதற்கிடையில், இந்த போட்டிக்கு முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் “ஐபிஎல் 2025 தொடரில் ஒரு புதிய வரலாறு படைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது உங்கள் அணி அதிகபட்ச ஸ்கோர்களை அடித்து வருகிறது 300 ரன்கள் அடிக்குமா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜேம்ஸ் பிராங்கிளின் ” நிச்சியமாக ஆமாம், ஏன் முடியாது?” எங்களுடைய அணியில் பேட்டிங் பலம் மிகவும் அபாரமானதாக உள்ளது. எங்களுடைய மைதானம் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச், மற்றும் வீரர்களின் தற்போதைய ஃபார்ம் ஆகியவை எங்களுக்கு பெரிய பலமாக இருக்கிறது. இன்று நடைபெறவுள்ள லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் நாங்கள் ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க முயற்சிப்போம்.
அடுத்ததாக வருகின்ற போட்டிகளிலும் அப்படி தான் விளையாடுவோம். எனவே, 300 ரன்கள் என்பது இந்த சீசனில் சாத்தியமே” எனவும் 300 ரன்களை அடிப்பது தான் எங்களுடைய டார்கெட் என்கிற பாணியில் ஜேம்ஸ் பிராங்க்ளின் பேசியிருக்கிறார். இவர் பேசியதை பார்த்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரசிகர்கள் எந்த அணியுடன் ஹைதராபாத் 300 ரன்கள் அடிக்க போகிறது என ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.