ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2-வது டி20 போட்டி முடிந்த பிறகு "இங்கிலாந்தின் சிறந்த பந்து வீச்சாளரை எதிர்கொள்ள விரும்பினேன்" என திலக் வர்மா பேசியுள்ளார்.
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று சொன்னால் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தான். இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது.
அதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். இவருடைய இந்த அதிரடி ஆட்டம் தான் இந்திய அணி வெற்றிபெறவும் காரணம். இவருடைய அசத்தலான ஆட்டத்தால் 19.2 ஓவர்களில் இந்தியா 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டி முடிந்த பிறகு பேசிய திலக் வர்மா பல விஷயங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக வேகப்பந்துவீச்சில் மிரட்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தை எதிர்கொண்டது பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நான் பேட்டிங் செய்ய வருவதற்கு முன்னதாகவே அணியில் சிறந்த பந்துவீச்சாளரை தேர்வு செய்து அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பினேன்.
ஏனென்றால், மற்ற பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் அழுத்தத்தில் இருப்பார்கள். எனவே இங்கிலாந்தின் சிறந்த பந்து வீச்சாளரை எதிர்கொள்ள விரும்பினேன். அவர் எப்படி பந்துவீசினால் அவருடைய பந்தை எப்படி எதிர்கொள்ளலாம் என வலைப்பயிற்சியில் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். எனவே, ஆர்ச்சர் பந்து வீச வரும்போதெல்லாம் நான் அவரை எதிர்கொண்டு விளையாட முடிவு செய்தேன்.
எனவே, என்ன நடந்தாலும், நான் இறுதி வரை விளையாடுவேன் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டே இரண்டாவது போட்டியில் விளையாடினேன். அதைப்போல, ஆட்டத்தை முடிக்க விரும்பினேன். கடந்த போட்டியின் போது நான் கௌதம் கம்பீருடன் பேசும்போது அவர் எனக்கு சில விஷயங்களை சொல்லி தந்தார். அதனையும் என்னுடைய மனதில் எடுத்துக்கொண்டு விளையாடினேன்” எனவும் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.