இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்..? குஜராத் மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெரும் 2-வது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை.
நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் தகுதி சுற்று (Qualifier 1) போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நேரடியாக இறுதி போட்டிக்குத் தேர்வானது.
இதன்பின், நடந்த முதல் எலிமினேட்டர் (Eliminator) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றிற்கு முன்னேறியது.
இந்நிலையில் முதல் தகுதி சுற்றில் தோல்வியை தழுவிய குஜராத் அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியும் இன்று நடைபெறவுள்ள 2-வது தகுதி சுற்றில் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல்லில் மும்பையுடன் மோதிய இரண்டு போட்டிகளில் குஜராத் அணி ஓரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், இரு அணி வீரர்களும் முழு உத்வேகத்துடன் களமிறங்குகின்றனர்.
இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணியுடன் மோதவுள்ளது. மேலும், இந்த சீசனில் வேறு எந்த மைதானத்தையும் விட அகமதாபாத் மைதானம் அதிக வெற்றியைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.