யுவராஜ், ரெய்னா, ஹர்பஜன் செய்த காரியம் ..! கொந்தளிக்கும் மாற்று திறனாளிகள்.!

சர்ச்சை வீடியோ : சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. இந்த அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படமான “தோபா, தோபா” என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
அந்த வீடியோவில் மூவரும் நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளை போல நடனமாடி இருக்கிறார்கள். இதனை பார்த்த மாற்று திறனாளிகள் அவர்களை கிண்டல் செய்யும் வகையில் நடனம் ஆடி இருப்பதாக கொந்தளித்து உள்ளனர். நடைபெற்று முடிந்த இந்த லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் 15 நாட்கள் இடைவிடாது 7 போட்டிகளில் நம் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விளையாடிருந்தனர்.
அதனால், அவர்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதாகவும், உடலில் பல இடங்களில் வலி இருப்பதாகவும் சுட்டிக்காட்டுவதற்காக பாலிவுட் பாடலான “தோபா, தோபா” என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடும் எண்ணத்தில் அவர்கள் கால்களை இழுத்து இழுத்து நடந்து செல்வார்கள்.
இதனால், அது நடப்பதில் சிரமம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது போல இருப்பதாக மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் சார்பில் கண்டனங்கள் பலரும் தெரிவித்தனர். மேலும், இந்திய பாராலிம்பிக் சங்கமும் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தனர். பாராலிம்பிக் சங்கம் இது குறித்து கூறுகையில், “இந்த நடத்தை அவமானமாகவும், அறிவற்ற வகையிலும் இருக்கிறது. நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் உங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு என்பது இருக்க வேண்டும்.
நீங்கள் தான் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளிகளை போல நடந்து செல்வதும், கேவலமான முறையில் சைகை செய்வதும், அவர்களால் செய்ய முடியாத விஷயங்களை செய்து காட்டி சிரிப்பதும் நகைச்சுவை அல்ல. இது அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறி இருந்தனர்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங் அந்த வீடியோவை நீக்கியதுடன், எக்ஸ் தளத்தில் மன்னிப்பும் கேட்டிருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “நாங்கள் எங்களது உடல் நிலையை பற்றி சொல்வதற்காகவே அந்த வீடியோவை வெளியிட்டோம். யாருடைய மனதையும் புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ எங்கள் நோக்கமில்லை.
???????? pic.twitter.com/mCMCquRbbZ
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 15, 2024
நாங்கள் ஏதேனும் தவறு செய்ததாக யாராவது நினைத்தால், உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சனையை இங்கேயே முடித்துக் கொள்வோம்” என்று பதிவிட்டிருந்தார். இதோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் நினைத்தனர்.
ஆனால், தற்போது புது டெல்லியில் உள்ள அமர் காலனி காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மேம்பாட்டு தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குனர் அர்மான் அலி இந்திய வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தற்போது, அந்த ஒரு வீடியோவால் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய மூவரும் சிக்கலில் இருந்து வருகின்றனர்.