என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.
ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ஐபிஎல் தொடர் சரியாக தொடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொடரில் இது வரை மும்பை அணி 10 போட்டிகள் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளை வென்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் இருக்கின்றது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்த மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே சரிவுகளையே சந்தித்தது. முதலில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து 4-வது போட்டியில் வெற்றி பெற்று தான் தொடரின் முதல் வெற்றியையே பதிவு செய்தது. இந்நிலையில், நேற்றைய போட்டியிலும் லக்னோ அணியிடம் தோல்வி அடைந்து அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புக்கு கேள்வி குறி ஆகி உள்ளது.
ஆனால், ஒரு சில கணித முறைகள் படி கணக்கிட்டு பார்த்தால் மும்பை அணி ப்ளே ஆஃப் போவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அது என்ன மாதிரியான வாய்ப்புகள் என்பதை தற்போது பார்க்கலாம். முதலில் மும்பை அணிக்கு மீதம் இருக்கும் 4 போட்டிகளிலும் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் இருக்கும். அதன் பின் சென்னை அணி மீதம் இருக்கும் 5 போட்டிகளையும் மிகவும் மோசமாக தோல்வி அடைய வேண்டும்.
அப்படியே சென்னை அணி வெற்றி பெற்றாலும் 2 போட்டிகளை தாண்டி வெற்றி பெற கூடாது. அதிலும், சிஎஸ்கே அணிக்கு பஞ்சாப் அணியுடன் இருக்கும் 2 போட்டிகளில் 1 போட்டியை சென்னை அணி அருகில் வந்து வெற்றி பெற்றாலும் மும்பை அணிக்கு சாதகமாக இருக்கும். புள்ளிப்பட்டியில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் தங்களது போட்டிகளில் தோல்வி அடையாமல் வெற்றி பெற வேண்டும்.
இறுதியாக, பெங்களூரு, பஞ்சாப், லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியடைய வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளை தாண்டி பெறாமல் குறைவான ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும், இப்படியெல்லாம் நடந்தால் மும்பை அணி 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் அதிக அளவில் இருப்பதில் 3-வது அல்லது 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கும் அத்துடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெரும் என்று ஒரு சில கணித முறைகளை மும்பை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இவைகளை தாண்டி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், ஒரு வேலை ஒரு போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட ‘ப்ளே ஆஃப்’ சுற்று கனவு சிதைந்து விடும் என்பது உறுதி. இதனால் இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் மிகப்பெரிய வெற்றியை மும்பை அணி பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.