‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக 5 முறை தொடர் தோல்விகளை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.
இதன் காரணமாக 10.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மூலம் சிஎஸ்கே அணி, இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால், எந்த ஒரு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்றதில்லை, வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. மேலும் தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 முறை தோல்வியை சந்தித்ததும் இதுவே முதல்முறை.
அந்த வகையில், கொல்கத்தா அணியிடம் நேற்று தோற்றது தான் பந்துகளின் அடிப்படையில் சிஎஸ்கே -வின் மிகப்பெரிய தோல்வியாகும். அட ஆமாங்க… மொத்தம் 59 பந்துகள் மிச்சம் வைத்து கொல்கத்தா, சிஎஸ்கே -ஐ சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. இதற்கு இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 109 ரன்களை எடுத்தது குறைந்தபட்சமாக இருந்தது.
ரசிகர்களுமே இதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் தவித்து போய் இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல், நேற்று மொத்தமாகவே வெறும் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்திருந்தது சென்னை அணி. ஆனால், முதல் 7 பந்துகளிலேயே இரண்டு சிக்ஸர்கள் அடித்துவிட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அதெநேரம், தொடர்ந்து டாட் பால் ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தை காடுகளாக்க முயற்சிக்கிறதா? ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். நேற்றைய போட்டியில் 51 டாட் பால் ஆடி ‘Green Dot Ball Initiative’ மூலம் 25,500 மரங்களை நடுவதற்கு உதவியுள்ளது என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, ஒரு காலத்தில் எப்படி இருந்த பங்காளி அப்படிங்கற மாதிரி தான் தோன்றுகிறது.