“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் நாங்கள் கூறினோம்” – ODI கேப்டன் மாற்றம் குறித்து கங்குலி விளக்கம்!
ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து,ரோஹித் சர்மா தற்போது டி20 கேப்டனாக செயல்படுகிறார்.அதே நேரத்தில்,விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார்.அதன்படி,நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டிசம்பர் 26-ம் தேதி முதல் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளது.
இந்த நிலையில்,தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்தது.அதில், கேப்டனாக கோலியும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து,ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியிலும் விராட் தொடர்ந்து நீடிப்பாரா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில்,ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்படுவதாகவும்,இந்திய அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனவும் நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில்,ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
“உண்மையில்,பிசிசிஐ ஆனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று விராட்டைக் கேட்டுக் கொண்டது, ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.மேலும்,டி20 மற்றும் ஒரு நாள் போட்டி ஆகியவற்றிற்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதை சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதினர்.
எனவே,விராட் டெஸ்ட் கேப்டனாக தொடர்வார் என்றும் ரோஹித் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.இது பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் இணைந்து எடுத்த முடிவு.மேலும்,இது தொடர்பாக,பிசிசிஐ தலைவர் என்ற முறையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன், தேர்வுக்குழு தலைவரும் அவருடன் பேசினார்.கோலி ஒப்புக்கொண்டதற்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்ட்டது.
அதுமட்டுமல்லாமல்,ரோஹித் ஷர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.எனினும்,விராட் டெஸ்ட் கேப்டனாக நீடிப்பார்.டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை கேப்டனாக இருந்த கோலியின் பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த காலத்தில், இந்தியா விளையாடிய 95 ஆட்டங்களில் 65-ல் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.