பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
பாகிஸ்தான் அணியை விட நாங்கள் திறமையில் முன்னேறி இருக்கிறோம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லியே தெரியவேண்டாம். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே அந்த போட்டியை எல் கிளாசிகோ என்று தான் கூறுவார்கள். மொத்தமாக இரண்டு அணிகளும் இதுவரை 135 போட்டிகள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 73 முறை பாகிஸ்தான் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 57 முறை வெற்றிபெற்றுள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 23 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையில், இந்திய ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் இரு அணிகளின் திறமைகளை பற்றி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அணியில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் அவர்கள் ஆக்ரோஷமாக விளையாட கூடிய வீரர்கள் இல்லை. எனவே, ஒரு நாள் போட்டிகளில் நிதானமாக விளையாடி வெற்றிபெற முடியுமா என்பது சவால் தான்.
இது பாகிஸ்தான் அணியின் பலவீனமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். அதைபோல இந்தியாவை நான் சமீபகாலமாக வைத்து பார்க்கையில் எனக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் கடினமான சூழ்நிலைகளை கூட சுலபமாக கையாள்கிறார்கள். திறமையைப் பொறுத்தவரை, நாங்கள் பாகிஸ்தான் அணியை விட ரொம்பவே முண்ணேறி இருக்கிறோம் என்று தான் சொல்வேன். குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில். நாங்கள் (இந்தியா) அணியிலும் நல்ல ஆல்ரவுண்ட் திறன்களைக் கொண்டுள்ளோம். அக்சர் (படேல்) விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
அவரைப்போலவே இன்னும் பல சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். அதைபோல கில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார், ரோஹித் மற்றும் விராட் தொடர்ந்து ரன்கள் எடுத்தவுடன், இந்த அணி தடுக்க முடியாததாக ஒரு நிலையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை, முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகள் எடுப்பதைப் பார்ப்பது நல்லது. காயத்திற்குப் பிறகு, மீண்டும் இப்படி விளையாடியது பார்க்க நன்றாக இருக்கிறது” எனவும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.