கோகோ-கோலா பாட்டில்கள் அகற்றம்-ரொனால்டோவின் வழியில் வார்னர்?…!
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது.
ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,இலங்கைக்கு எதிரான நேற்றைய டி20 உலகக் கோப்பைக்கான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றதையடுத்து,இப்போட்டியில் 65 ரன்கள் அடித்து ஃபார்முக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர்,நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் சமயத்தில்,தனக்கு முன்பு இருந்த மேசையில் தண்ணீர் பாட்டில்களும், கோகோ-கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த வார்னர்,இரண்டு கோகோ-கோலா பாட்டில்களையும் எடுத்து மேசையின் கீழே கொண்டு சென்றார்.
இதைக் கண்ட உதவியாளர் விரைந்து அந்த பாட்டில்களை பெற முயன்றார் .அப்போது வார்னர், பத்திரியாளர்களிடம், “இந்த கோகோ-கோலா பாட்டில்களை நான் திரும்ப வைக்க வேண்டுமா” என சிரித்துக்கொண்டே கேட்டார்.இதனையடுத்து,மேஜையின் மீது மீண்டும் கோகோ-கோலா பாட்டில்களை வைத்த வார்னர், “ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்” எனத் தெரிவித்தார்.
— Hassam (@Nasha_e_cricket) October 28, 2021
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில்,கோலா பாட்டில்களை நீக்கிய வார்னர், மீண்டும் அதை திரும்ப வைத்தது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.