தன்னை விட வார்னே சிறந்த பௌலர் – முத்தையா முரளிதரன்
அக்டோபர் 16 இல் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முரளிதரன் கூறியதாவது, தன்னை விட ஷேன் வார்னே மிகச்சிறந்த சுழற்பந்து வீரராக இருந்தார் என்றும், தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் இலங்கையின் வணிந்து ஹசரங்காவை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆகியோர் கடந்த தலைமுறையின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முரளிதரன் 800 விக்கெட்களும், வார்னே 708 விக்கெட்களும் எடுத்து மகத்தான சாதனை புரிந்திருக்கின்றனர்.
மேலும் முரளிதரன், ஷேன் வார்னே குறித்து பேசும் போது, தன்னை விட வார்னே மிகச் சிறந்த பௌலர் என்றும் நான் அவரைப் பார்த்தே வளர்ந்ததாகவும் கூறியுள்ளார். நாங்கள் ஒன்றாக விளையாடிய காலத்தில் தான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார். நாங்கள் வார்னேவை மிகவும் இழந்து வாடுவதாகவும் முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.
தற்போதைய உலகக்கோப்பை குறித்து முரளிதரன் கூறும் போது, பேட்ஸ்மேன்கள் வணிந்து ஹசரங்காவிற்கு எதிராக விளையாடும் போது எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.