556 நாட்கள்…மீண்டும் கேப்டனாக களமிறங்கிய விராட் கோலி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி களமிறங்கியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
16-ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது இன்று மொகாலியில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றனர். விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இதனிடையே, நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதாவது கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி இன்று மீண்டும் பெங்களூரு அணி கேப்டனாக களமிறங்கியுள்ளார். அதாவது, கடைசியாக 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பெங்களூரு அணி கேப்டனாக செயல்பட விராட் கோலி, 556 நாட்கள் பிறகு பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மீண்டும் பெங்களூரு அணிக்கு தலைமை தாங்குகிறார்.
டூ பிளசிஸ் காயம் காரணமாக இந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக மட்டுமே களமிறங்கியுள்ளார். இதனால், பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி மீண்டும் செயல்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து பேசிய விராட், டுபிளஸிஸ் இன்று இம்பாக்ட் வீரராக பேட்டிங் மட்டுமே செய்வார் என்றும், இதனால் தாம் கேப்டன் பணியை செய்வதாக கூறினார்.மேலும், இதே போன்று பஞ்சாப் அணியில் தவான் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடாததால், சாம் கரண் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.